×

முன்னாள் அமைச்சர்கள் பெயரை சொல்லி வேலை வாங்கி தருவதாக ரூ.2.17 கோடி மோசடி: கோவை அதிமுக பிரமுகர் கைது

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெயரை சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக 68 பேரிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பொன்மேடு பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி (34). இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரிடம் கோவை கவுண்டம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவக்குமார் என்கிற ஆத்மா சிவக்குமார் (53), அதிமுக ஆட்சியின்போது, அமைச்சர்களாக இருந்த எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மூலம் அரசு துறையில் வேலை வாங்கி தர முடியும் என கூறியுள்ளார். இதை நம்பிய மாரிச்சாமி 2016 பிப்ரவரி மாதம் ஆத்மா சிவக்குமாரிடம் கிராம நிர்வாக அலுவலர் பணி கேட்டுள்ளார். அதற்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதவேண்டும். அதன்பின், ரூ.10 லட்சம் கொடுத்தால் வேலை கிடைத்து விடும் என கூறியுள்ளார். இதையடுத்து, தேர்வு எழுதிய மாரிச்சாமி முதல் கட்டமாக ரூ.8.20 லட்சத்தை ஆத்மா சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் ேவலை வாங்கி தரவில்லை. இவரை போல் 68 பேரிடம்  ஆத்மா சிவக்குமார் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.17 கோடி மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, 68 பேர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து  போலீசார் நடத்திய விசாரணையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி என கூறி ஆத்மா சிவக்குமார் மேலும் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து ஆத்மா சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும், இவருக்கு மோசடியில் உதவிய அவரது அக்கா சத்திய பாமா (55), உறவினர் ஜெயகிருஷ்ணன் மற்றும் மணிகண்டன், சரவணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆத்மா சிவக்குமார், வ.உ.சி பேரவையில் நிர்வாகியாக உள்ளார். இவர், அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்து அதை காட்டி வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தெரிகிறது. இவர் மோசடியாக அபகரித்த பணத்தில் லூனா நகரில் அடுக்குமாடி வீடுகள் கட்டி உள்ளார். இதில், 7 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் அவர் சொகுசு கார், பல இடங்களில் நிலங்கள் வாங்கி உள்ளார். இவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.  அவரது சொத்து பத்திரங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்….

The post முன்னாள் அமைச்சர்கள் பெயரை சொல்லி வேலை வாங்கி தருவதாக ரூ.2.17 கோடி மோசடி: கோவை அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Gov. ,Pramukha Pramukha ,Supreme Leader ,Pramukh Pramukh ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்